WPL 2025: மகளிர் பிரீமியர் 2025 தொடரின் 14வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
இரண்டு முறை இறுதிப் போட்டியாளர்களான டெல்லி கேபிடல்ஸ், இப்போது போட்டியின் ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்து அடுத்த கட்டத்தில் தங்கள் இடத்தை உறுதி செய்துள்ளது. அதாவது, நேற்று பெங்களூரு எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், டெல்லி – பெங்களூரு அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி தொடக்க வீராங்கனைகள், ஸ்மிருதி மந்தனா (8) – Wyatt-Hodge(21) ரன்களில் ஆட்டமிழந்தனர். Ellyse Perry நிதானமாக விளையாடி 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய வீராங்கனைகள், சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 147 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீராங்கனையும், கேப்டனுமான Meg Lanning 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அடுத்து களமிறங்கிய வீராங்கனைகள் Shafali Verma – Jess Jonassen ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. அதன்படி, 43 பந்துகளில் ஷபாலி வர்மா 4 சிக்ஸ், 8 போர்கள் அடித்து 80 ரன்களும், Jess Jonassen 38 பந்துகளில் 61 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உதவினர். இதன் மூலம் அந்த அணி 15.3 ஓவரிலேயே 148 என்ற வெற்றி இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் ஆட்டநாயகன் விருது ஷபாலி வர்மாவுக்கு வழங்கப்பட்டது.
இந்த தோல்வி மூலம், RCB அணிக்கு தொடர்ச்சியாக நான்காவது தோல்வியை சந்தித்துள்ளது. மேலும், சொந்த மண்ணான M. சின்னசாமி மைதானத்திலும் தோல்வியை தழுவியுள்ளது. நடப்பு சாம்பியனான RCB அணி, தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளுடன் போட்டியைத் தொடங்கியிருந்தாலும், தற்போது தொடர்ச்சியாக நான்கு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இந்த தோல்விகள் அனைத்தும் சொந்த மண்ணில் நடந்துள்ளன. ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது,
மொத்தம் 7 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி, இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.5 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 2வது இடத்தில் மும்பை அணியும், 5 போட்டிகளில் 2 வெற்றியுடன் உபி வாரியஸ் அணி 3வது இடத்திலும் உள்ளது. குஜராத் அணி 5வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.