2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது.. மேலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.. அந்த வகையில் இதுவரை உருமாறிய கொரோனாவில் ஒமிக்ரான் மாறுபாடு அதிக பேரழிவை ஏற்படுத்தியது..
இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000,2000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 3000-ஐ கடந்துள்ளது.. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது..
XBB.1.16 மாறுபாடு என்றால் என்ன? XBB.1.16 என்பது ஓமிக்ரானின் துணை மாறுபாடு ஆகும். இது இரண்டு ஒமிக்ரான் வகைகளின் மறுசீரமைப்பு ஆகும். ஒமிக்ரான் மற்றும் அதன் மாறுபாடுகள் பொதுவாக எளிதில் பரவும் தன்மை கொண்டது.. மேலும் இந்த மாறுபாடு நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
XBB.1.16 அறிகுறிகள் : இதுவரை சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, கடுமையான அறிகுறிகள் எதுவும் இல்லை. மற்ற கொரோனா வகைகளைப் போலவே அறிகுறிகளை கொண்டுள்ளது..
- நீடித்த காய்ச்சல்
- சளி மற்றும் மூக்கடைப்பு
- தொண்டை வலி
- தலைவலி
- உடல் சோர்வு
- தசை வலி
- பொதுவாக இந்த அறிகுறிகள் நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை நீடிக்கும்
XBB.1.16: யார் அதிக ஆபத்தில் உள்ளனர்? கொரோனா என்பது நுரையீரலைப் பாதிக்கும் ஒரு சுவாச நோயாகும். வயதானவர்கள், இணை நோய்கள் உள்ளவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம்
தற்காப்பு நடவடிக்கைகள்:
- பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்..
- நெரிசலான பகுதிகளைத் தவிர்க்கவும்
- சானிடைசரை கொண்டு கைகளை கழுவ வேண்டும்.
- நல்ல கை சுகாதாரத்தை பராமரிக்கவும்
- தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்
XBB.1.16: நாம் கவலைப்பட வேண்டுமா? ஃபோர்டிஸ் மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவ ஆலோசகர் டாக்டர் ரிச்சா சரீன் பேசிய போது : கொரோனா பாதிப்பின் அதிகரிப்பு புதிய மாறுபாட்டால் வழிநடத்தப்படுவதாக நான் உணர்கிறேன். ஆனால் XBB.1.16 என்பது ஒமிக்ரானின் மாறுபாடாகும், எனவே பெரும்பாலான மக்கள் காலப்போக்கில் ஆன்டிபாடிகளை உருவாக்கியிருப்பதால், அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை.. இருப்பினும், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது.. மக்கள் நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும், நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் அல்லது இணை நோய் உள்ளவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்..” என்று தெரிவித்தார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா இதுகுறித்து பேசிய போது “ XBB.1.16 மாறுபாடு காரணமா கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஆனால் அது கடுமையான நோய் மற்றும் இறப்புகளை ஏற்படுத்தாத வரை பீதி அடையத் தேவையில்லை.” என்று தெரிவித்தார்..