செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகையாலும், குறிப்பிட்ட சேவையை நிறுத்தியதாலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ஆயிரம் பணியாளர்களை பிரபல பேடிஎம் நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது.
பிரபல பே.டி.எம். நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரித்திருப்பதாக அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 10 முதல் 15 சதவிகித ஊழியர்களுக்கு ஆகும் செலவு குறைக்கப்பட்டுள்ளதாகவும், பணியும் சிறப்பாக முடிக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பணித்திறன் அடிப்படையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆயிரம் பணியாளர்களை அந்நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கடன் வழங்கும் பிரிவில் பணியாற்றி வந்ததாக தெரிகிறது. குறுகிய தொகை கடன் வழங்குவதை பே.டி.எம். நிறுவனம் நிறுத்தியதன் எதிரொலியாகவும், இப்பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.