அறிவாலயத்தை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று தமிழக பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, ”மத்திய பட்ஜெட்டில் இந்த ஆண்டு ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் குறைந்தபட்சம் 60 லட்சம் பேர் பயனடைகின்றனர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (சமக்ர சிக் ஷா) திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் உண்மைக்கு மாறான தகவல்களை கூறிக்கொண்டிருக்கிறார்.
பாஜக தலைவராக தொடர முடியாது என்று எனக்கு தெரியும்; ஆனால், நான் இங்கு இருந்து செல்லும்போது அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கலையும் எடுக்காமல் விட மாட்டேன். அதேபோல, 2026-ல் 35 ஊழல் அமைச்சர்களும் சிறைக்கு செல்வார்கள். தமிழகத்தில் 2026-ல் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். தமிழிசை தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. அந்த குழு இந்தியா முழுவதும் பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்கு சென்று, முதல்வர்களை சந்திக்க உள்ளது. அங்குள்ள மக்கள் நலத்திட்டங்களை பார்த்துவிட்டு, 2026 பாஜக தேர்தல் அறிக்கையை தயார் செய்வார்கள்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அறிவாலயத்தை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அண்ணாமலையில் பேச்சு தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், அண்ணா அறிவாலயத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது. பிறகு எப்படி செங்கலை அகற்ற முடியும்..? திமுகவை அழிக்க கிளம்புவோர் தங்கள் அழிவுக்கு தொடக்கப்புள்ளி வைக்கின்றனர். திமுகவினர், அண்ணாமலை போல் இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல, கொள்கை உடையவர்கள்” என தெரிவித்தார்.
Read More : பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் இணை ஆணையர்..!! அதிரடியாக பாய்ந்த ஆக்ஷன்..!!