விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இந்த நிகழ்ச்சியில் அவருக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு டைட்டில் பட்டத்தை வென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தனது தயாரிப்பில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக அறிவித்தார். ஆனால், இந்தப் படமும் துவங்கப்படாமலேயே உள்ளது.
இந்நிலையில், பாலாஜி முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலினை டேக் செய்து ‘தயவுசெய்து டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். இது ஏராளமான உயிர்களை அழித்துள்ளது. ரம்மியை ஒப்பிடும்போது குடியால் அழிந்தவர்கள் தான் அதிகம்’ என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில், ’மதுவினால் என்னை போன்ற பலர் அனாதையாக மாறியுள்ளனர். பலர் குடும்பத்தை இழந்துள்ளனர். என்னை அரசியலுக்கு இழுக்காதீர்கள். உங்களால் என்னை சமாளிக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார். பாலாஜி முருகதாஸின் இந்தப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.