மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரில் காத்கோபர் பகுதியில் 3 அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த வீட்டின் உரிமையாளர், தனது நெருங்கிய நண்பர் ஒருவரை 3-வது மாடியில் வாடகைக்கு தங்க வைத்துள்ளார். வாடகைக்கு வந்தவர், உரிமையாளரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு வீட்டு உரிமையாளரின் மகள் வயிறு வலி காரணமாக அவரை மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், மகளிடம் இதுகுறித்து விசாரித்தபோது, வீட்டில் யாரும் இல்லாதபோது, 3ஆவது மாடிக்கு குடிவந்த நண்பர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இதை வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதன்பின்னர் அந்த சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது. அதனை மரபணு பரிசோதனை செய்ததில், சிறுமியும் வாடகைக்கு தங்கிய நபரும் அந்த கருவின் உயிரியியல் பெற்றோர் என்ற விவரம் இறுதி அறிக்கையில் தெரியவந்தது. 6 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தின்போது, சிறுமி மைனர் என நிரூபிக்க போதிய சான்றுகள் இல்லை என நீதிமன்றம் கூறியது. அந்த பாதிக்கப்பட்ட நபர், தொடர்ச்சியாக பலமுறை குற்றவாளியால் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார் என்பதற்கு உறுதியான மற்றும் தொடர்ச்சியான நிரூபணங்கள் உள்ளன எனக்கூறி குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து 6 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.