தன்னை மீறி அதிமுக வரவு, செலவு கணக்குகளை மேற்கொள்ளக் கூடாது என கரூர் வைஸ்யா வங்கிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். முன்னதாக பொருளாளர் தாக்கல் செய்ய வேண்டிய வரவு, செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். பொதுக்குழு முடிவில் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமியை தான் கட்சியை விட்டு நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக கணக்கு வைத்துள்ள கரூர் வைஸ்யா வங்கிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ”இந்திய தேர்தல் ஆணைய சட்டத்தின் படி இன்று வரை நான்தான் ஒருங்கிணைப்பாளர், நான்தான் பொருளாளர். நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கும் போது என்னைக் கேட்காமல் எந்தவித வரவு, செலவு கணக்குகளையும் மேற்கொள்ளக் கூடாது” என்று தெரிவித்துள்ளார். மேலும், தன்னை கேட்காமல் வரவு, செலவு கணக்கை மேற்கொண்டால் வங்கி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.