சென்னை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 27 வயதான ரம்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம் பெண் ஒருவர், கடந்த 2020ம் ஆண்டு புகார் ஒன்று அளித்துள்ளார். அந்தப் புகாரில், கடலூர் மாவட்டம் லால்பட் பகுதியை சேர்ந்த 27 வயதான முகமது என்பவர், பி.டெக் படித்த போது ரம்யாவை காதலித்துள்ளார். அதன்படி இருவரும் காதலர்களாக ஒன்றாக பல இடங்களில் சுற்றியுள்ளனர்.
இந்நிலையில், முகமது, சென்னையில் உள்ள தனியார் கால் டாக்சி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த போது, ரம்யாவையும் அதே நிறுவனத்தில் பணிக்கு சேர்த்துள்ளார். அப்போது அவர் ரம்யாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி, அடிக்கடி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு முகமது வேலைக்காக துபாய் சென்றுள்ளார்.
பின்னர், கடந்த 2018ம் ஆண்டு முகமதுவுக்கு அவரது பெற்றோர் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரம்யா, முகமது பெற்றோரிடம் சென்று நடந்ததை எல்லாம் கூறியுள்ளார். அப்போது அவர்கள் ரூ.5 லட்சம் கொடுத்து, மதம் மாறினால் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். ஆனால் அதன் பிறகு அவர்கள் திருமணம் செய்து வைக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த ரம்யா, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், வடபழனி அனைத்து மகளிர் போலீசார், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், மதமாற்றம் தடை சட்டம் 2002 ஆகிய பிரிவுகளின் கீழ் முகமது மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், முகமது துபாயில் இருந்ததால், அவருக்கு வடபழனி போலீசார் அனைத்து விமான நிலையத்திற்கும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்தனர்.
இதையடுத்து, கடந்த 4 ஆண்டுகளாக துபாயில் இருந்து நேற்று முன்தினம் சென்னை திரும்பிய முகமதுவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்து வடபழனி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, போலீசார் முகமதை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.