மேட்டூர் அருகே உள்ள கருமலை கூடல் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல், இவருடைய மகன் சிபி(25). இவர் மீது கொலை வழிப்பறி அடிதடி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதோடு,கருமலைக்கூடல் காவல் நிலைய குற்ற பதிவேடு பட்டியலிலும் இவரின் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் புதுசாம்பள்ளியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இருட்டான பகுதியில் கொடூரமான முறையில் இவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார்.
ஆனால் மேட்டூர் பகுதியில் நள்ளிரவில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார் என்ற தகவல் மட்டுமே முதலில் காவல்துறையினருக்கு கிடைத்திருக்கிறது. ஆகவே சுமார் ஒரு மணி நேர தேடலுக்கு பின்னர் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்றனர். அந்த பகுதியில் சிபியின் உடலை கண்ட சிபியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இதனைத் தொடர்ந்து, சிபியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுப்ப விடாமல் அவரது பெற்றோர்கள் காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்ற வருடம் ஏப்ரல் மாதம் 7ம் தேதி கருமலைக்கூடல் மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஒரு கொலை நடந்தது அந்த கொலை வழக்கிலும் சிபிக்கு தொடர்பு இருக்கிறது. அதன் காரணமாக பழிக்கு பழியாக இவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.