இன்ஸ்டாகிராம் காதலியை விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வருபவர் சாந்தி (35). இவர் கடந்த 22ஆம் தேதி சூளைமேடு காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தன்னுடைய 13 வயது மகள் தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவரை திடீரென காணவில்லை. எனவே, அவளை கண்டுபிடித்து தர வேண்டும் என கூறியிருந்தார். சாந்தியின் புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே, சிறுமியின் செல்போன் டவர் மூலமாக கண்காணித்த போலீசார், அந்த செல்போன் சிக்னல் மகாபலிபுரம் பகுதியைக் காட்டியதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் அங்கு சோதனை செய்தபோது சிறுமியும், அவருடன் மற்றொரு இளைஞரும் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதைத் தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த துளசிதரன் (24) என்பதும், கடந்த ஒரு வருடமாக இன்ஸ்டாகிராம் மூலமாக பள்ளி மாணவியும், துளசிதரனும் பழகி வந்ததும் தெரியவந்தது. மேலும், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததும் விசாரணையில் அம்பலமானது. இது தொடர்பாக சூளைமேடு போலீசார் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசாரிடம் துளசிதரனை ஒப்படைத்தனர். இதனை அடுத்து மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் இன்ஸ்டாகிராம் மூலம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. உடனடியாக துளசிதரன் மீது சிறுமியை கடத்திய வழக்கு மற்றும் போக்சோ வழக்கு ஆகிய இருபிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.