கள்ளக்குறிச்சி, கச்சிராயப்பாளையம் கிராமத்தில் வீடு வீடாக சென்று சாராயம் விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அங்கு பைக்கில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இரண்டு மர்ம நபர்களை காவல்துறையினர் சோதனை செய்தனர் அப்போது அவர்கள் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தது தொியவந்தது.
காவல்துறையினர் விசாரணையில் அவர்கள் கல்வராயன்மலை கொட்டப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன்(22), இவரது மைத்துனர் கோயம்புத்தூர் ஆனைமலை கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகன் சரவணன் என்பது தெரியவந்தது. இவர்களில் கொட்டப்புத்தூர் சரவணன் காவல்துறையினருக்கு சந்தேகம் வராதவாறு டிப்டாப்பாக உடை அணிந்து பேக்கில் சாராய பாக்கெட்டுகளுடன் பைக்கில் சென்று கச்சிராயப்பாளையம் பகுதியில் உள்ள வீடுகளில் சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார்.
எப்பொழுதும் போல நேற்று சாராயம் விற்பனைக்கு புறப்பட்டபோது, அவரது மைத்துனர் கோவை சரவணன் தானும் துணைக்கு வருவதாக கூறி இருவரும் சேர்ந்து சாராயம் விற்றுக் கொண்டிருந்தனர். அப்போது கோவை சரவணன் வேட்டி, சட்டை அணிந்தும், இன்னொருவர் பேண்ட், சட்டை அணிந்தும் இருந்ததால் அவர்கள் மீது சந்தேகப் பட்ட காவல்துறையினர் அவர்களை சோதனை செய்தனர். அப் போது இருவரும் காவல்துறையினரிடம் சிக்கினர். இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து பைக் மற்றும் 12 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.