தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், ”தமிழகத்தில் இனி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11ஆம் நாளை, போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாகத் தேர்ந்தெடுத்துள்ளோம். ஆகையால் அன்றைய நாள், பள்ளி கல்லூரிகளில் இதுதொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், போதையின் தீமைகள் குறித்த காணொளிக் காட்சிகள் திரையிடப்பட உள்ளன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தங்களுக்கு முறையாகத் தகவல் தெரிவிக்கப்படும். அன்றைய நாள், தங்களது தொகுதிக்குட்பட்ட இடங்களில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் தாங்களும் தவறாது பங்கேற்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இது அரசியல் பிரச்சினை அல்ல; நாட்டின் எதிர்காலம் குறித்த பிரச்சனை. குறிப்பாக, இளைய சமுதாயத்தினரின் வாழ்க்கை குறித்த பிரச்சனை. எனவே, நீங்கள் இதில் உங்கள் பங்களிப்பினை வழங்கிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். தொடர்ச்சியான பரப்புரைகளின் மூலமாகத்தான் போதைப் பொருட்களின் தீமையை உணர்த்த முடியும். அதற்கு மக்கள் பிரதிநிதிகளாகிய உங்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். போதைப் பாதை அழிவுப்பாதை என்பதை உணர்த்துவோம்..! அதன் நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுப்போம்..”!. இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.