மத்தியப்பிரதேசத்தில் பாஜக பிரமுகரால் சிறுநீர் கழிக்கப்பட்டு அவமதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரின் கால்களை முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் கழுவி மரியாதை செலுத்தினார்.
மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் ஒருவர் அமர்ந்த நிலையில் இருக்க, அவர் மீது பிரவேஷ் சுக்லா என்ற பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்து அவமதித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த வீடியோவை கண்டித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சித்த நிலையில், அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் கவனத்துக்கும் சென்றது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிரவேஷ் சுக்லா ஆளும் பாஜகவைச் சேர்ந்தவர் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.
தொடர்ந்து முதலமைச்சர் உத்தரவுக்கு பின் பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லா மீது இந்திய தண்டனை சட்டத்தின் 294, 504 ஆகிய பிரிவுகள், வன்கொடுமை தடுப்புச் சட்டம், தேசியப் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்று கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிரவேஷ் சுக்லா ஆளும் பாஜகவைச் சேர்ந்தவர் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இதற்கு பதிலளித்த முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் ‘குற்றவாளிக்கு மதம், ஜாதி, கட்சி போன்ற பாகுபாடு கிடையாது. எனது கட்சியைச் சேர்ந்தவர் என்பதற்காக அவரை கைது செய்வதிலிருந்து காப்பாற்றப்பட மாட்டார்’ என தெரிவித்தார். தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிரவேஷ் சுக்லாவின் வீடும் இடிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞரை தனது இல்லத்திற்கு வரவழைத்து, அவரது காலைக் கழுவி, அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வு குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.