மாநில அரசு ஒருபுறம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது என்று தெரிவித்து வந்தாலும், மறுபுறம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணம் தான் இருக்கிறது. இதனை தடுப்பதற்கு மாநில அரசும், காவல்துறையும் முயற்சி செய்கிறதா? அல்லது வெறுமனே அறிக்கைகள் மட்டும் விட்டுக் கொண்டிருக்கிறதா? என்ற சந்தேகம் மிகவும் வலுவாகவே எழுகிறது.
அந்த வகையில், திருநெல்வேலி அருகே உள்ள கீழ வீரராகவபுரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் முகேஷ் (34). தனியார் உணவு விநியோக நிறுவனம் ஒன்றில் இவர் பணிபுரிந்து இருந்தார் இவருக்கு திருமணம் ஆகி சுபிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றன.
இந்த நிலையில், நேற்று இரவு இவர் பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது குருந்துடையார்புறம் பகுதியில் முகேஷை திடீரென்று வழிமறித்த ஒரு மர்மகும்பல் அவரை அரிவாளால் சாரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. இதில் பலத்த காயமடைந்த முகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடி துடித்து உயிர் இழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை காவல்துறையினர் முகேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.
அத்துடன் இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த அழகுமுத்து, முருகேஷ், கிரி உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.