இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். மாதாந்திர உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பெரு நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்தால் படித்த இளைஞர்களுக்கு இந்திய அளவில் 500 முன்னணி நிறுவனங்களில் 12 மாதம் வேலைவாய்ப்பு பயிற்சி (Internship) வழங்கும் பிரதம மந்திரி தேசிய இன்டர்ன்ஷிப் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சிக்கு 21 வயது முதல் 24 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிப்ளமோ, பி.இ. பி.ஏ. பிஎஸ்சி, பி.காம் மற்றும் ஐ.டி.ஐ கல்வித் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சேலம் மாவட்டத்தில் இப்பயிற்சியினை வழங்க 21 நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 280 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளன. இதில் 10-ம் வகுப்பு கல்வித்தகுதியில் 14 பேர், 12-ம் வகுப்பு கல்வித்தகுதியில் 49 பேர், டிப்ளமோ கல்வித்தகுதியில் 14 பேர், பட்டபடிப்பு முடித்தோருக்கு 159 பேர், ஐ.டி.ஐ படித்தோருக்கு வழங்கப்படவுள்ளது. 44 பேருக்கு பெரு நிறுவனங்கள் மூலம் பயிற்சி வழங்கப்படும்.
மேலும் இப்பயிற்சி மாதாந்திர உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் மற்றும் தற்செயலான செலவுகளுக்கு ஒரு முறை மட்டும் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். எனவே. தகுதியுள்ளவர்கள் http://pminternship.mca.gov.in/login/ என்ற இணையதளம் மூலம் 12.03.2025 க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.