மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் 13-ம் தேதி அறிவித்தார்.. மேலும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000 + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5000 வரவு வைக்கப்பட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார்… மேலும் திராவிட 2.0 ஆட்சியில் மகளிர் உரிமை தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்..
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.. அதே போல் திமுக அமைச்சர்கள், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் முதல்வரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.. அதே நேரத்தில் தோல்வி பயம் காரணமாகவே முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன..
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் மற்றொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. அதன்படி முதியோர், கைம்பெண்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையோடு சேர்த்து ரூ.2000 வரவு வைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி! கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.
நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்!
இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29 இலட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும், 5 இலட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும், பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 இலட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4000 ரூபாயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம்.
அதுமட்டுமின்றி, மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன்.. தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : Flash : நகைப்பிரியர்கள் கவனத்திற்கு..! இன்று தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? நிலவரம் இதோ..!



