சென்னை மறைமலைநகரில் கொரோனா தொற்று பாதிப்பால் 60 வயது முதியவர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியது. இந்தியாவில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ், தற்போது மீண்டும் தலை தூக்கத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் சற்று அதிகமாகவே இருக்கிறது. பொது இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.
இந்த சூழலில் தான், தமிழ்நாட்டிலும் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், 60 வயது முதியவர் ஒருவர் இந்த வைரஸால் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மறைமலைநகரை சேர்ந்த முதியவர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தமிழ்நாடு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.