தமிழ்நாட்டில் நாளை (நவம்பர் 18) முதல் அரசு நிர்வாகப் பணிகள் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது. பல்வேறு வருவாய்த் துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வருவாய்த் துறை ஊழியர்கள் நாளைய தினம் முதல் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் உட்பட, அனைத்து அரசு நிர்வாகப் பணிகளையும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO), நில அளவர்கள், வட்டாட்சியர்கள் (Tahsildar) என வருவாய்த் துறையின் கீழ் வரும் அனைத்து நிலை ஊழியர்களும் பங்கேற்க உள்ளனர்.
வேலைநிறுத்தப் போராட்டத்தின் முதல் கட்டமாக, இன்று மாலை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து, நாளை முதல் முழுமையான பணிப் புறக்கணிப்பு மற்றும் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய்த் துறை ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவதால், பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், பட்டா மாற்றம் போன்ற முக்கிய நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படும். அத்துடன், தேர்தல் தொடர்பான முக்கியப் பணிகளும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாடு முழுவதும் அரசு நிர்வாகத்தில் ஒரு தேக்கநிலை உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



