விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் வெளியாகவில்லை.. இந்த படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார்.
எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, இது குறித்து திரைப்பட தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பினர்.. மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்..
இதனால் படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது.. தயாரிப்பு தரப்பு இந்த தடையை நீக்க உச்சநீதிமன்றத்தை அணுகியது. ஆனால் இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது..
ஜனநாயகன் சென்சார் தொடர்பான வழக்கு கடந்த 20-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.. அப்போது தணிக்கை வாரியம் தரப்பு, ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் தரப்பு ஆகியவை தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தன..
தணிக்கை வாரியம் தரப்பு “ படத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்தும் முடிவு தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரியும்.. இந்த முடிவு ஜனவரி 5-ம் தேதி இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது. சான்று வழங்கும் நடைமுறையில் நாங்கள் தவறு செய்யவில்லை என்பதை நிரூபிக்க தனி நீதிபதி வாய்ப்பளித்திருக்க வேண்டும்..” என்று வாதிட்டது.
தொடர்ந்து ஜனநாயகன் படக்குழு தனது வாதங்களை முன்வைத்தது. மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தகவல் தான் தெரிவிக்கப்பட்டது.. அதன் உத்தரவு நகல் வழங்கப்படவில்லை.. சான்றிதழ் வழங்குவதில் இருந்த பல தடை எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.. ஆனால் தடை இருந்திருக்கிறது.. சென்சார் தொடர்பான அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது. ஜனநாயகன் பட விவகாரத்தில் டிசம்பர் 29-ம் தேதிக்கு பிறகு அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளது..” என்று தெரிவித்தது.. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்..
இந்த நிலையில் ஜனநாயகன் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது.. ஜனநாயகன் பட வழக்கில், உடனே தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.. வழக்கை மீண்டும் தனி நீதிபதியின் விசாரணைக்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், முறையான வாய்ப்பு அளித்து தனி நீதிபதி விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டனர்..
படத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்த முடியுமா என்பதை தனி நீதிபதி தான் முடிவெடுக்க முடியும் என்று, இந்த வழக்கை தனி நீதிபதி தகுதியின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கவில்லை என்றும் இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.. எனவே ஜனநாயகன் வழக்கு மீண்டும் தனி நீதிபதி அமர்வுக்கே சென்றுள்ளது.. அவர் மீண்டும் வழக்கை முறையாக விசாரித்து தீர்ப்பு வழங்குவார்.. எனவே ஜனநாயகன் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போயுள்ளது..
Read More : தங்கம் வாங்குபவர்களுக்கு குட்நியூஸ் சொல்லப்போகும் மோடி அரசு..! ஒரே நேரத்தில் 3 நல்ல செய்திகளா?



