உச்ச நீதிமன்றம் யுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு நிறுத்தி வைத்துள்ளது. தலைமை நீதிபதி, சமூகம் எந்தவித பாகுபாடுகளும் இன்றி ஒன்றாக வளர, இது குறித்து ஆராய சில முக்கிய பிரமுகர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் கேட்டுக்கொண்டார்.
யுஜிசியின் புதிய விதிமுறைகள் ஒருதலைப்பட்சமானவை என்றும், பொதுப் பிரிவு மாணவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுபவை என்றும் விமர்சகர்கள் வாதிட்டதால், இந்த விதிகள் பரவலான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக வழக்கறிஞர்கள் வினீத் ஜிண்டால், மிருத்யுஞ்சய் திவாரி மற்றும் ராகுல் திவான் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் யுஜிசியின் புதிய விதிமுறைகளுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது..
மேலும் யுஜிசியில் ஏற்கனவே இருக்கும் 2012-ம் ஆண்டுக்கான ஒழுங்குமுறை நடைமுறைகள் தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.. புதிய விதிமுறையின் நோக்கம் என்ன? பலன் என்ன என்பதை பார்க்க வேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்றம் இதுகுறித்து அரசு பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது..
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் முழுவதும் குறைகளைத் தீர்ப்பதற்கும், பின்தங்கிய குழுக்களுக்கு ஆதரவளிப்பதற்கும் ஒரு கட்டமைக்கப்பட்ட செயல்முறையை உருவாக்குவதற்காக, யுஜிசி சமீபத்தில் ‘உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான விதிமுறைகள், 2026’ என்ற புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.
இதனிடையே யுஜிசி விதிமுறைகளில் “சாதி அடிப்படையிலான பாகுபாடு” என்ற சொல் வரையறுக்கப்பட்டுள்ள விதம் குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளதால், யுஜிசியின் புதிய விதிமுறைகள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகக் குழுக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
யுஜிசியின் புதிய விதிகளின்படி, ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் ஒரு சம வாய்ப்பு மையத்தை நிறுவ வேண்டும். அது சிவில் சமூகக் குழுக்கள், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம், ஆசிரிய உறுப்பினர்கள், பணியாளர்கள், உள்ளூர் ஊடகங்கள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்படும். இந்த மையம் சட்ட உதவியை எளிதாக்குவதற்காக மாவட்ட மற்றும் மாநில சட்ட சேவைகள் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும்.
நிறுவனத்தின் தலைவரால் அமைக்கப்படும் இந்த சம வாய்ப்பு மையத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி), பட்டியல் சாதிகள் (எஸ்சி), பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி), மாற்றுத்திறனாளிகள் (பிடபிள்யூடி), பெண்கள் ஆகியோரின் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள்.
யுஜிசியின் புதிய விதிமுறைகளின் கீழ், சமத்துவம் தொடர்பான கொள்கைகள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், பின்தங்கிய குழுக்களுக்கு கல்வி மற்றும் நிதி வழிகாட்டுதலை வழங்குவதற்கும், அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும் இந்த மையம் பொறுப்பாகும்.
எனினும் யுஜிசி விதிமுறைகளில் “சாதி அடிப்படையிலான பாகுபாடு” என்ற சொல் வரையறுக்கப்பட்டுள்ள விதம் குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளதால், யுஜிசியின் புதிய விதிமுறைகள் சமூக ஊடகங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
“சாதி அடிப்படையிலான பாகுபாடு என்பது பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு எதிராக சாதி அல்லது பழங்குடியினரின் அடிப்படையில் மட்டுமே செய்யப்படும் பாகுபாடு ஆகும்,” என்று யுஜிசி விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெட்டிசன்கள் யுஜிசியின் புதிய விதிமுறைகளை பொதுப் பிரிவினருக்கு எதிரான சட்டங்கள் என்று விமர்சிப்பதால், ‘#ShameonUGC’ என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.. புதிய யுஜிசி “சமத்துவ” ஒழுங்குமுறைகள் 2026, இடஒதுக்கீடு அல்லாத குடும்பங்களில் பிறந்த ஒரே காரணத்திற்காக, பொதுப் பிரிவு மாணவர்களை வளாகங்களில் வன்முறையைத் தூண்டுபவர்களாக வெட்கமின்றி முத்திரை குத்துகின்றன! எங்களுக்கு எதிராகவே அமைக்கப்பட்டுள்ள சமத்துவக் குழுக்கள், தவறான குற்றச்சாட்டுகளிலிருந்து எந்தப் பாதுகாப்பும் இல்லை, மேலும் வளாகங்கள் சாதியப் போர்க்களங்களாக மாறி வருகின்றன.” என்று பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்..



