பீகாரின் கைமூர் பகுதியை சேர்ந்தவர் பவன்குமார்.. இவருக்கு நேற்று முன்தினம் ஜூன் 9ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமணத்தின்போது மணமகளின் நெற்றியில் குங்குமம் பூசும் சடங்கு நடந்தது.. குங்குமம் பூச கைகளை உயர்த்தியபோது திடீரென மாப்பிள்ளையின் கை நடுங்கத் தொடங்கியது..
கை வெடவெடவென நடுங்குவதை கண்டு மணப்பெண் பதறிப்போனார்.. உடனே மணமகனை மென்டல் என்று சொன்னதுடன், உடனே இந்த கல்யாணத்தை நிறுத்துங்கள் என்று மனமகள் கதறி அழுதார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, மணப்பெண்ணை சமாதானப்படுத்த முயன்றும், கல்யாணத்தை நிறுத்துவதிலேயே மணப்பெண் உறுதியாக இருந்தார். இதனால் இரு குடும்பத்தினரும் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டனர்.
உடனே தகவலறிந்து வந்த போலீசார் இரு வீட்டினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.. அப்போது மணமகன் வீட்டில், ரிசப்ஷன் உட்பட எல்லா சடங்குகளும் முடிந்துவிட்டது. இப்போதுவந்து மாப்பிள்ளைக்கு கை நடுங்குவதாக சொல்லி திருமணத்தை நிறுத்த பார்க்கிறார் மணப்பெண்.. இது எங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் என்று குற்றஞ்சாட்டினார்கள்.
அதற்கு மணமகள் வீட்டினர், எங்கள் மகள் வேண்டாம் என சொன்ன பிறகு கட்டாயப்படுத்த விரும்பவில்லை.. இந்த திருமணம் நடக்க கூடாது. திருமணத்துக்காக நாங்கள் தந்த வரதட்சணையை திருப்பி தர சொல்லுங்கள் என்றார்கள். உடனே மாப்பிள்ளை வீட்டார் “கல்யாணத்துக்கு ரூ.1 லட்சம் வரதட்சணை என்று பேசி, ரூ. 90,000 மட்டுமே தந்தார்கள்.. ஆனால் நாங்கள் ரூ.30,000 பட்டுப்புடவை, ரூ.20,000, டிஜே கச்சேரி, ரூ.10,000 போக்குவரத்து செலவு செய்துட்டோம்.. எனவே 10 பைசாகூட தர முடியாது என உறுதியாக சொல்லிவிட்டனர்.
இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேச முயன்ற போலீசாரின் முயற்சி வீன் போனது. இறுதியில் கல்யாணமும் நின்றது. குங்குமம் வைக்கும் போது கை நடுங்கியதால் கல்யாணமே நின்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.