அண்ணன் வாங்கிய ரூ.15 லட்சம் கடனுக்காக சிங்கப்பூரிலிருந்து திரும்பிய தம்பியை வெட்டி படுகொலை செய்த பாஜ நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரபாபுவின் மகன் சக்திவேல் (38). இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு பேராவூரணி ஒன்றிய பாஜகத் தலைவரான குறிச்சி வடக்கு தெருவைச் சேர்ந்த ராஜேஷ் குமார் (39) என்பவரிடம் 15 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், அந்தக் கடனை திருப்பிச் செலுத்தாமல் சக்திவேல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இதனால், கடன் வழங்கிய ராஜேஷ் குமார் பலமுறை சக்திவேலின் உறவினர்களிடம் வந்து பணம் கேட்டுள்ளார். 20 நாட்களுக்கு முன்பு சக்திவேலின் தம்பி பிரகதீஸ்வரன் (29) வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு, ராஜேஷ் குமார் பிரகதீஸ்வரனைச் சந்தித்து “அண்ணன் வாங்கிய 15 லட்சத்தை நீங்களே திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் பிரகதீஸ்வரன் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை தீவிரமடைந்த நிலையில், கோபமடைந்த ராஜேஷ் குமார், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு பிரகதீஸ்வரனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார். கொலைக்குப் பிறகு, ராஜேஷ் குமார் நேராக வாட்டாத்திகோட்டை காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்துள்ளார்.
இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து, ராஜேஷ் குமாரை பாப்பாநாடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லப்பட்ட பிரகதீஸ்வரனின் உடலை கைப்பற்றிய போலீசார் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அண்ணன் வாங்கிய கடனுக்கு தம்பியை பாஜக ஒன்றிய தலைவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: நாட்டின் புதிய துணை ஜனாதிபதி யார்?. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது!