பிரேசிலின் பெர்னாம்புகோவில் நடந்த சாலை விபத்தில் 17 பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பிரேசிலில் பஹியாவில் உள்ள ப்ரூமாடோ நகரத்தில் இருந்து 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, பெர்னாம்புகோ மாநிலத்தில் உள்ள சலோவா என்ற நகரத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர் திசையில் உள்ள சாலையில் சென்று சாலையோர பாறையில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 17 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும், அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். உள்ளூர் ஆளுநர் ஜெரோனிமோ டீக்சீரா ட்விட்டரில் பதிவிட்டு, மீட்பு நடவடிக்கைகளிலும் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதிலும் தனது நிர்வாகம் உதவி வருவதாகக் கூறினார். “எனது குழுவுடன் நிலைமையை நான் கண்காணித்து வருகிறேன், மேலும் உயிர் மற்றும் சொத்து இழப்பு, காயங்கள் மற்றும் அனைத்து குடும்பங்களின் துயரத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் எழுதினார்.
2024 ஆம் ஆண்டில் பிரேசிலில் போக்குவரத்து விபத்துக்களில் 10,000 க்கும் மேற்பட்டோர் இறந்ததாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில், தென்கிழக்கு பிரேசிலில் ஒரு பயணிகள் பேருந்து கவிழ்ந்து, இரண்டு குழந்தைகள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். பிப்ரவரியில், சாவோ பாலோ மாநிலத்தில் ஒரு நெடுஞ்சாலையில் பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒரு லாரியுடன் மோதி 12 பயணிகள் கொல்லப்பட்டனர். செப்டம்பரில், கோரிடிபா முதலைகள் கால்பந்து அணியை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து, மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
Readmore: 1 கிலோ ரூ.1.11 லட்சம்! காஸ்ட்லி தீபாவளி ஸ்வீட்! இதில் அப்படி என்ன ஸ்பெஷல்?



