குடியரசுத் துணைத்தலைவர் சி பி ராதாகிருஷ்ணன், பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரின் (சுவரன் மாறன்) நினைவு தபால்தலையை டெல்லியில் குடியரசுத் துணைத்தலைவர் இல்லத்தில் நேற்று (14.12.2025) வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் துணைத்தலைவர், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், தமிழ் மொழி மற்றும் பண்பாட்டிற்கு மத்திய அரசு தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவு மற்றும் முக்கியத்துவத்தைப் பாராட்டினார். காசி தமிழ் சங்கமம் போன்ற முன்முயற்சிகளையும், இதுவரை உரிய அங்கீகாரம் பெறாத தமிழ் மன்னர்கள், தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் மத்திய அரசின் தொடர்ச்சியான முயற்சிகளையும் பாராட்டினார்.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலையை வெளியிட்டது, இத்தகைய தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என குடியரசுத் துணைத்தலைவர் தெரிவித்தார்.பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பண்டைய தமிழ்நாட்டின் மிகவும் புகழ்பெற்ற ஆட்சியாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார் என்றும், கி.பி. 7-ம் நூற்றாண்டிலிருந்து 9-ம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டின் மையப் பகுதிகளை ஆண்ட முத்தரையர் வம்சத்தைச் சேர்ந்தவர் என்றும் குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார். திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு சுமார் நான்கு தசாப்தங்கள் ஆட்சி செய்த அவரது ஆட்சி, நிர்வாக நிலைத்தன்மை, ஆட்சி விரிவாக்கம், கலாச்சாரப் பாதுகாப்பு மற்றும் போர் வெற்றிகள் ஆகியவற்றிற்காக போற்றப்பட்டது என்றார்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் கல்வெட்டுகள், பேரரசரின் கோயில் கொடைகள், பாசனப் பணிகள் மற்றும் தமிழ் இலக்கியத்திற்கான அவரது பங்களிப்புகளுக்கு சான்றாக விளங்குகின்றன என்றும் தெரிவித்தார். அவரது ஆட்சிக்காலம் தென்னிந்திய வரலாற்றில் சிறப்பான இடம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நினைவுகூர்ந்த குடியரசுத் துணைத்தலைவர், இந்தியாவின் பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் நாட்டிற்காக உழைத்த மகத்தான தலைவர்களின் பங்களிப்புகளை ஆவணப்படுத்தி, கௌரவித்து, பாதுகாப்பது அவசியம் என்றும் அது ஒரு தேசிய முன்னுரிமை என்றும் தெரிவித்தார்.
சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவின் காலகட்டத்தில், தமிழ்நாட்டை உள்ளடக்கிய அனைத்து பகுதிகளிலிருந்தும் சுதந்திரப் போராட்ட வீரர்கள், தலைவர்கள் மற்றும் பேரரசர்களை கௌரவிக்கும் மத்திய அரசின் முயற்சிகளை அவர் சுட்டிக்காட்டினார்.



