தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (SIR) கைவிடக் கோரி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், நேற்று முன்தினம் (நவம்பர் 16) சென்னையில் போராட்டம் நடைபெற்றது. சென்னை திருவல்லிக்கேணி, சுவாமி சிவானந்தா சாலையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில், தவெக-வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மைப் பிரிவுப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உட்பட பல முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்தின்போது, சாலையின் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த செடிகள் சேதப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், திருவல்லிக்கேணி காவல்துறையினர் இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகளின் பெயர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அமைதியான முறையில் போராட்டம் நடந்த நிலையில், சாலையின் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



