குளறுபடிகளுக்கு இடம் தராமல், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும். ஓபிசி மக்களின் உரிமையை காப்பாற்ற நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழ்நாடு அரசு சிறப்பு தீர்மானம் இயற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு தற்போது இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை (OBC) கணக்கெடுக்க ‘திறந்தவெளி பதிவு முறையை’ (Open-ended format) பயன்படுத்த திட்டமிட்டுள்ளது ஏமாற்றம் அளிப்பதாக அவர் தெரிவித்தார். ஓபிசி பட்டியலில் உள்ளவை வகுப்புகள் மட்டுமே, சாதிகள் அல்ல என்று மத்திய அரசு கூறும் விளக்கம் ஏற்புடையதல்ல என்று குறிப்பிட்ட அவர், பொதுமக்கள் வாய்மொழியாக கூறும் சாதி பெயரை அப்படியே பதிவேற்றினால், இந்தியாவில் 46 லட்சம் சாதிகள் இருப்பதாக தவறான புள்ளிவிவரங்கள் உருவாகும் ஆபத்து இருப்பதாக எச்சரித்தார். இதற்கு மாற்றாக, மாநில அரசுகளின் பட்டியல்களை தொகுத்து, மக்கள் அதில் இருந்து தேர்வு செய்யும் (Drop-down list) முறையையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தற்போதைய தவறான முறையை தொடர்ந்தால், கணக்கெடுப்பிற்காக ஒதுக்கப்படும் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணமும், லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் உழைப்பும் வீணடிக்கப்பட்டு இது வெறும் கண்துடைப்பாக மாறிவிடும் என்று மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். பட்டியலின மக்களைப் போலவே ஓபிசி மக்களின் உண்மையான எண்ணிக்கை, கல்வி மற்றும் சமூக நிலையை துல்லியமாக கண்டறிவதே சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம் என்பதால், மத்திய அரசு உடனடியாக உரிய திருத்தங்களை செய்ய வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.



