வாகனங்கள் மற்றும் எஃகு போன்ற முக்கியத் தொழில்களுக்கு முன்னுரிமை அளித்து, மாநிலங்களுக்கான வணிக எல்.பி.ஜி கேஸ் விநியோகத்தை, 70 சதவீதமாக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே தொடரும் மோதல்களுக்கு மத்தியில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
மற்ற அத்தியாவசியத் துறைகளுக்கு ஆதரவளிக்கும் எஃகு, வாகனங்கள், ஜவுளி, சாயங்கள், இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் போன்ற அதிக தொழிலாளர் தேவைப்படும் தொழில்களுக்கு இந்த கூடுதல் விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் எண்ணெய் துறை செயலாளர் நீரஜ் மிட்டல் கடிதம் எழுதியுள்ளார்.
“தற்போதுள்ள 50 சதவீத ஒதுக்கீட்டிற்கு கூடுதலாக, மேலும் 20 சதவீதம் இப்போது முன்மொழியப்பட்டுள்ளது. இது, மொத்த வர்த்தக LPG ஒதுக்கீட்டை, நெருக்கடிக்கு முந்தைய, வணிக பயன்பாட்டு எல்.பி.ஜி அளவின் 70 சதவீதமாக உயர்த்தும்,” என்று மிட்டல் எழுதியுள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு
இன்று காலை, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.10 அளவுக்கு அரசாங்கம் குறைத்தது. இதன் மூலம், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.3 ஆகவும், டீசல் மீதான வரி பூஜ்ஜியமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. “உலகளாவிய எண்ணெய் அதிர்ச்சியிலிருந்து” நுகர்வோரையும் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களையும் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்தியா தனது கச்சா எண்ணெயில் கிட்டத்தட்ட 88 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமும், ஹார்முஸ் நீரிணையை மூடப்போவதாக ஈரான் விடுத்த எச்சரிக்கையும் உலகளாவிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தியக் கப்பல்களை அந்தப் போக்குவரத்துப் புள்ளி வழியாகச் செல்ல ஈரான் அனுமதித்திருந்தாலும், உலகளாவிய எண்ணெய் விநியோகப் பாதைகள் குறித்த நிச்சயமற்ற நிலை தொடர்ந்து நீடிக்கிறது.
“மற்ற எல்லா நாடுகளும் செய்தது போல, இந்தியக் குடிமக்களுக்கு விலைகளை கடுமையாக உயர்த்துவது அல்லது சர்வதேச விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து இந்தியக் குடிமக்களைப் பாதுகாக்கும் வகையில் தனது நிதிநிலையில் ஏற்படும் பாதிப்பைத் தாங்கிக்கொள்வது என அரசாங்கத்திற்கு இரண்டு தேர்வுகள் இருந்தன,” என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார். மேலும், இந்தியக் குடிமக்களைப் பாதுகாப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“சர்வதேச விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள இந்த நேரத்தில், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் சந்தித்து வரும் பெரும் இழப்புகளைக் குறைப்பதற்காக, அரசாங்கம் தனது வரி வருவாயில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது,” என்றும் அவர் மேலும் கூறினார்.
Read More : பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய டிரம்ப்.. ‘மோடியும் நானும் காரியங்களைச் சாதித்து காட்டுவோம்..’



