இந்திய அரசு 15-6-1999ல் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் பட்டியல்கள் தொடர்பான ஆணைகளில் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்துதல் ஆகியவற்றிற்கான கோரிக்கைகளை முடிவு செய்வதற்கான வழிமுறைகளை வகுத்துத் தந்துள்ளது (இது மேலும் 25-6-2002 மற்றும் 14-9-2022ல் திருத்தப்பட்டது). இந்த வழிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட மாநில அரசு / யூனியன் பிரதேச நிர்வாகம் நியாயப்படுத்தி பரிந்துரைத்துள்ள மற்றும் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் ஆகியவற்றால் ஒப்புக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு சட்டம் திருத்தப்படும்.
முன்மொழிவுகள் மீதான அனைத்து நடவடிக்கைகளும் இந்த அனுமதிக்கப்பட்ட வழிமுறைகளின்படியே மேற்கொள்ளப்படும். சம்பந்தப்பட்ட மாநில அரசின் பரிந்துரை என்பது கோரிக்கையை மேலும் செயல்பாட்டிற்கு எடுத்துக்கொள்வதற்கான முன்நிபந்தனை ஆகும். பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகமானது தமிழ்நாட்டில் இருந்து பழங்குடியினர் பட்டியலில் வால்மீகி சமுதாயத்தை சேர்ப்பதற்கான முன்மொழிவை பெற்றுள்ளது. ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான முன்மொழிவுகள் வழிமுறைகளின் குறிப்பிட்ட சில நடைமுறைகளை கடைபிடித்தாக வேண்டும்.
இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை ஆகும். முன்மொழிவுகள் இந்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகத்தாலும் பிறகு பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தாலும் பரிசீலிக்கப்படுகின்றன. முன்மொழிவை இந்திய பதிவாளர் ஜெனரல் பரிந்துரைக்காவிட்டால் அதற்கான காரணங்கள் மாநில அரசுகளுக்கு தெரிவிக்கப்படும். கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால் அவற்றை மாநில அரசு வழங்க முடியும். இவ்வகையில் பல முன்மொழிவுகள் பல நிலைகளில் பரிசீலனையின் கீழ் உள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.