கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் சுற்றுப்பயணம் தற்காலிகமாக தள்ளிவைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நேற்றுமுன்தினம் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனிடையே, கரூர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின், கரூரில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
மேலும், அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து வீட்டின் முன் போராட்டம் நடத்துவதற்காக பல்வேறு அமைப்புகளும் வரவுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், நேற்று விஜய் வீட்டை முற்றுகையிடுவதற்காக வந்த மாணவர் அமைப்பினர் 20-க்கும் மேற்பட்டோரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மேலும், விஜய் வீடு அமைந்திருக்கும் பகுதியில் தடுப்புகள் அமைத்து, அவ்வழியே வருவோரை தீவிர விசாரணைக்குப் பின்னரே அனுமதிக்கின்றனர்.
விஜய் வீட்டுக்கு மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று வந்தனர். ஏற்கனவே விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக சிஆர்பிஎஃப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல, பனையூரில் விஜய் கட்சி அலுவலகத்துக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூர் சம்பவத்தையடுத்து விஜய் தனது சுற்றுப்பயணத்தை தற்காலிகமாக தள்ளிவைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 அல்லது 3 வாரங்களுக்கு சுற்றுப்பயணத்தை ஒத்திவைக்க இருப்பதாகவும், அதுகுறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவிப்பு வெளியிட்ட உள்ளதாக கூறப்படுகிறது.