ஒரு குடும்பத்தில் நிலையான வருமானம் ஈட்டும் அரசு ஊழியர் பணியில் இருக்கும் போதே இறந்து போனல், அவரது குடும்பம் வறுமை நிலைக்கு தள்ளப்படும். ஒருவேளை ஏற்கனவே வறுமையில் இருந்தால், அந்தக் குடும்பத்துக்கு பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே தான் அரசு அவர்களுக்கு உதவும் வகையில் கருணை அடிப்படையில் பணி வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தகுதியான நபருக்கு அரசு வேலை வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறது. இந்த நிலையில் பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கருணை அடிப்படையிலான பணி நியமனம் தொடர்பான விதிகளில், மாநில அரசு முக்கியமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது
மனிதவள மேலாண்மை துறையால் வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணிகள் (கருணை அடிப்படையில் நியமனம்) விதிகள், 2023-இல் பல முக்கியத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி..
மகள் மற்றும் மருமகனுக்கும் வாய்ப்பு: இதுவரை, திருமணமான மகள்கள் கருணை அடிப்படையில் வேலை பெற தகுதியற்றவர்களாக இருந்தனர். இனி, உயிரிழந்த அரசு ஊழியரின் திருமணமான மகளும், தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன், பெற்றோரை சார்ந்தே வாழ்ந்து வந்தார் என்பதை நிரூபித்தால், அவரும் கருணை அடிப்படையில் வேலை கோரலாம். ஒருவேளை, திருமணமான மகள் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருந்தால், அவரது கணவர் (அரசு ஊழியரின் மருமகன்) கூட வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
வறுமையான சூழல்: புதிய விதிகளின்படி, ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அவர்கள் வறுமையான சூழலில் உள்ளதாகக் கருதப்படுவார்கள்.
உறவினர்களின் பட்டியல்: புதிய விதிகளின்படி, இறந்த அரசு ஊழியரை சார்ந்த உறவினர்களின் தகுதி பட்டியல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சட்டப்பூர்வமாகத் திருமணம் ஆன மனைவி அல்லது கணவர், மகன் அல்லது மகள், திருமணமாகாத, விவாகரத்தான அல்லது கணவரை இழந்த ஊழியர்களின் பெற்றோர், திருமணமாகாத ஊழியரின் சகோதரன் அல்லது சகோதரி.
விண்ணப்பத்திற்கான கால அவகாசம்: கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், ஊழியர் இறந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும் என்பது தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்புகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இறந்தவரின் மனைவி/கணவர் அல்லது பெற்றோர் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். மகன், மகள், சகோதரன் அல்லது சகோதரி 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்றம் பல வழக்குகளில், கருணை அடிப்படையிலான நியமனம் என்பது வெறும் சலுகை அல்ல, அது அரசின் நெறிப்படுத்தப்பட்ட பொறுப்பு என்று வலியுறுத்தியது. குடும்பங்கள் தேவையற்ற அலுவல் சிக்கல்களால் பாதிக்கப்படக்கூடாது என்ற கருத்தை ஏற்று, அரசு 2023 விதிகளில் திருத்தங்களை செய்துள்ளது.
இந்த மாற்றங்களால், பல ஆண்டுகளாக விதிமுறைகளால் தகுதி இழந்திருந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. குறிப்பாக, திருமணமான மகள்கள் மற்றும் அவர்களின் கணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு, பல குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கை.