சார்- பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உட்பட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. குரூப்-2 ஏ தேர்வுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுஉள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சார்-பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உட்பட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 15-ம் தேதி வெளியிடப்பட்டது.
இதற்கான முதல்நிலைத் தேர்வு செப். 28-ம் தேதி நடைபெறும். தேர்வுக்கு ஆக.13-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை யுபிஐ வசதி மூலமாக செலுத்தலாம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது ஆகும். அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து கூடுதல் காலிப்பணியிடங்கள் பெறப்படு்ம்பட்சத்தில் கலந்தாய்வுக்கு முன்பாக மேலும் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மேலும், தேர்வர்களின் நலன் கருதி குரூப்-2 ஏ முதன்மைத்தேர்வு முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.