சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் 7 நாள் சிகிச்சை பெற்ற நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 21ஆம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று காலை நடைபயிற்சி மேற்கொள்ளும்போது அவருக்கு திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு இதய துடிப்பை சீராக வைத்துக்கொள்ள உதவும் பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அவரை திமுக கட்சி சார்ந்த பலர் நேரில் பார்த்து நலன் விசாரித்தனர். இதன்பின் அப்பல்லோ மருத்துவமனை தரப்பில், முதல்வர் ஸ்டாலின் 3 நாட்கள் இருந்து ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தவாறே ஸ்டாலின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோருடன் இணைந்து உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மக்களிடம் வீடியோ காலில் பேசுவது போன்ற வீடியோவும் வெளியிடப்பட்டது. இன்றுடன் 7வது நாளாக அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனை சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், முதல்வர் ஸ்டாலின் மருத்துவ சிகிச்சை முடித்து நலமுடன் இருக்கிறார். மருத்துவர் செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவக் குழு அவருக்கு சிகிச்சை அளித்தது. இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் முதல்வர், 3 நாட்களுக்கு பின் வழக்கமான பணிகளை தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின் ஸ்டாலினின் அரசு நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து திட்டமிட்டபடி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: விஜயகாந்த் சார் மட்டும் இல்லைன்னா என் கல்யாணம் நடந்திருக்காது..!! – பிரபல நடிகர் உருக்கம்