அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை சேர்ந்த 37 வயதான பெண் ஜெசிகா கோப்லாந்த். இவர் தனது பிறந்த நாளைக் கொண்டாட 2 வாரங்கள் லாஸ் வேகாஸுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இதனிடையே வீட்டில் தனது டீனேஜ் மகனையும் 7 நாய்களையும் உணவு, குடிநீர் இன்றி பூட்டி வைத்துள்ளார். ஜெசிகா கோப்லாந்தின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை கவனித்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கதவைத் திறந்து உள்ளே சென்றபோது அதிர்ச்சி அடைந்தனர். மலம் படிந்த தரை, அழுக்கு படிந்த சுவர், உணவு தண்ணீர் இன்றி சோர்வாக கிடந்த நாய்கள் மற்றும் டீனேஜ் சிறுவன் வீட்டில் இருந்தனர். சிறுவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், “இந்த வீடு பல வருடங்களாகவே இப்படித்தான் இருக்கு. அம்மா சுத்தம் பண்ணவே மாட்டாங்க” என்று தெரிவித்தான். வீட்டின் சுகாதார நிலைமைகள் மிக மோசமாக இருந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறுவன் அளித்த தகவலின்படி, ஜெசிகா கோப்லாந்த் ஜூலை 21ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாட லாஸ் வேகாஸுக்கு புறப்பட்டுள்ளார். போலீசாரும் அனிமல் கன்ட்ரோல் அதிகாரிகளும் நாய்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சுற்றுலா முடிந்து வீடு திரும்பிய ஜெசிகா கோப்லாந்தை போலீசார் கைது செய்தனர். சிறுவன் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டார். 7 நாய்களும் மருத்துவ பரிசோதனைக்காக விலங்கு பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த சம்பவம் அமெரிக்காவில் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read more: பெண்களே.. 2 லட்சம் டெபாசிட் செய்தால் 30 ஆயிரம் வட்டி..!! இந்த சேமிப்பு திட்டத்தை நோட் பண்ணுங்க..