நடிகர் சூர்யா சினிமா துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பயணம் அழகானது என தெரிவித்துள்ளார்.
தமிழ் நடிகர்களின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, சினிமா துறைக்கு வந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் முதன் முதலில் நடித்த ”நேருக்கு நேர்” திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்த படத்தில் விஜய், சிம்ரன், கவுசல்யா, ரகுவரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் வசந்த் இயக்கியிருந்தார். அறிமுகமான முதல் படமே சூர்யாவுக்கு மிகப்பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது.

இதையடுத்து, சூர்யா நடித்த அனைத்து படங்களுமே ரசிகர்களை கவர்ந்து இழுக்க தொடங்கியது. ஒரு சில படங்கள் வசூல் செய்வதில் பின்தங்கி இருந்தாலும், சூர்யா நடிப்பிற்காக வெற்றி பெற்றது. இதனால் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக சூர்யா கொடிக்கட்டி பறக்கிறார். இந்நிலையில், சூர்யாவின் 25 ஆண்டுகளை கொண்டாடும் வகையில், Suriya, 25 years of Suriya உள்ளிட்ட ஹேஷ் டேக்குகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சூர்யா தனது 25 ஆண்டு கால திரைப் பயணத்தில் சீரான இடைவெளியில் சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து தனக்கென மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த ஜெய்பீம், சூரரைப் போற்று படங்கள் பல்வேறு விருதுகளையும், பாராட்டுக்களையும் குவித்தது. பாலாவுடன் வணங்கான், சிவா இயக்கத்தில் பான் இந்தியா திரைப்படம் மற்றும் வெற்றி மாறனுடன் வாடிவாசல், விக்ரமின் அடுத்த பாகம் உள்ளிட்ட சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கிடையே, நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த 25 ஆண்டுகள் பயணம் மிக அழகானது என்றும் ஆசிர்வதிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். அவரது 25 ஆண்டுகள் சினிமா வாழ்க்கை பயணத்திற்கு ரசிகர்கள், நடிகர்கள், சினிமா துறையினர் சூர்யாவுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.