விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வம்சி பைடி பள்ளி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால், இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, தற்போதில் இருந்து புரமோஷன் பணிகளை படக்குழுவினர் துவங்கியுள்ள நிலையில், கடந்த 3 வாரங்களுக்கு முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், வருகிற 4ஆம் தேதி மாலை 4 மணிக்கு ‘வாரிசு’ படத்தின் இரண்டாவது பாடலான ‘தீ’ வெளியாக உள்ளதாக, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தெரிவித்துள்ளது. இதையடுத்து விஜய்யின் ரசிகர்கள் #TheeThalapathy என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். விஜய் கதாநாயகனாக ‘நாளைய தீர்ப்பு’ என்றப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடித்து வைத்தார். இந்தப் படம் 1992ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி தான் வெளியானது. விஜய் கதாநாயகனாக அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இந்தப் பாடல் வெளியிடப்பட உள்ளது, அவரது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.