ஆஸ்கர் விருது பெற்ற நடிகை லூயிஸ் பிளெட்சர், உடல்நலக் குறைவு காரணமாக பிரான்சில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது (88).
நடிகை லூயிஸ் பிளெட்சரின் இளமைக் காலம் அத்தனை வசந்தமானதாக இருக்கவில்லை. அவரது பெற்றோர்களுக்கு காது கேளாத தன்மை இருந்தது. 4 குழந்தைகளில் இரண்டாவதாக ஜூலை 22, 1934ஆம் ஆண்டு லூயிஸ் பிளெட்சர் பிறந்தார். 1958ஆம் ஆண்டு தொலைக்காட்சித் தொடர் மூலமாக தனது நடிப்பு பயணத்தைத் துவங்கிய நடிகை லூயிஸ் பிளெட்சர், 1975ஆம் ஆண்டு மிலோஸ் ஃபோர்மன் இயக்கிய ‘ஒன் ஃப்ளூ ஓவர் தி குக்கூஸ் நெஸ்ட்’ திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களிடையே மிக பிரபலமடைந்தார்.
லூயிஸ் பிளெட்சர் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் அகாடமி விருது, பாஃப்டா விருது, கோல்டன் குளோப் விருது ஆகியவற்றை பெற்றுள்ளார். ஆட்ரி ஹெப்பர்ன் மற்றும் லிசா மின்னெல்லி ஆகியோருக்குப் பிறகு, ஒரே படத்தில் நடித்ததற்காக ஆஸ்கர் விருது, பாஃப்டா விருது, கோல்டன் குளோப் விருது என 3 விருதுகளையும் பெற்ற மூன்றாவது நடிகை லூயிஸ் பிளெட்சர். எக்ஸார்சிஸ்ட் II: தி ஹெரெடிக் (1977), மூளைப்புயல் (1983), ஃபயர்ஸ்டார்ட்டர் (1984), ஃப்ளவர்ஸ் இன் தி அட்டிக் (1987), 2 டேஸ் இன் தி வேலி (1996) மற்றும் க்ரூயல் இன்டென்ஷன்ஸ் (1999) ஆகிய படங்கள் நடிகை லூயிஸ் பிளெட்சருக்கு ரசிகர்களிடையே பெயரைப் பெற்று தந்தன. அவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.