சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் ரம்யாகிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகிபாபு, சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வெளியான நாள் முதலே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவது மட்டுமின்றி, வசூலையும் வாரிக் குவித்து வருகிறது.
இந்நிலையில், இப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் நெல்சன் பேசுகையில், ஜெயிலர் படத்தில் ஒருவரை நடிக்க வைக்க நாங்கள் ஏற்பாடு செய்தோம். அவர் ரொம்ப டேக் வாங்கினார். இதையடுத்து, படத்தில் இருந்து அவரை நீக்கிவிடலாம் என்று சொல்லிவிட்டு நான் கிளம்பி விட்டேன்.
பின்னர் மறுநாள் ரஜினிகாந்த் என்னுடைய உதவி இயக்குனரிடம், ”என்னதான் இருந்தாலும் அந்த நபர் ரஜினி படத்தில் நடிக்க போகிறேன் என்று சொல்லிவிட்டு வந்திருப்பார். அவரின் ஆசையும் அவர்கள் வீட்டில் இருப்பவர்களின் எதிர்பார்ப்பும் ஏமாற்றம் அடைந்து விடும். அதனால் அந்த நபர் மீது நான் கை போட்டு நின்று கொள்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார் ரஜினி. இதை அப்படியே உதவி இயக்குனர் நெல்சனிடம் சொல்லியிருக்கிறார். இதை கேட்கும்போது எனக்கு குற்ற உணர்வு ஏற்பட்டது என்று கூறியுள்ளார் நெல்சன். ஆனால், அந்த நபர் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. தற்போது அவருடன் ரஜினிகாந்த் எடுத்த புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.