நடிகர் கார்த்தியின் ‘சர்தார்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இரும்புத் திரை, ஹீரோ படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக பி.எஸ். மித்ரன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘சர்தார்’. இந்தத் திரைப்படத்தில் கார்த்தி, சங்கி பாண்டே, ராஷி கண்ணா, ரஜிதா விஜயன், முரளி சர்மா, முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தில் நடிகை லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ், வரும் தீபாவளி அன்று வெளியிடுகிறது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி கதிரவன் என்ற ஐபிஎஸ் கதாபாத்திரத்திலும், சர்தார் சக்தி என்ற கதாபாத்திரத்திலும் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். வந்தியத்தேவனாக கார்த்தி நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் இன்று வெளியாக உள்ள நிலையில், ‘சர்தார்’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. டீசரில் அதிரடி ஆக்ஷன் மற்றும் இந்திய ராணுவத்தின் உளவுத்துறை சம்பந்தான காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இரட்டை கதாபாத்திரங்கள் என்று சொல்லப்பட்டாலும் பல்வேறு கெட்டப்புகளில் நடிகர் கார்த்தி மிகவும் மிரட்டலாக இந்தப் படத்தில் வருகிறார்.