பெங்களூரு விமான நிலையத்தில் துணை நடிகர் தாக்கிய விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கை எதிர்த்து விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதியும், சைதாப்பேட்டையைச் சேர்ந்த துணை நடிகர் மகா காந்தி என்பவரும் கடந்த ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விஜய் சேதுபதி மீது குற்ற அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகா காந்தி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நீதிமன்றம், இந்த வழக்கில் விஜய் சேதுபதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பியது. இதனையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு தடை கோரியும், தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரியும் விஜய் சேதுபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான குற்ற அவதூறு வழக்கு மீதான விசாரணையை நடத்தலாம் என்றும், அந்த விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும் கடந்த ஜூலை 29ஆம் தேதி உத்தரவிட்டது. அதேசமயம் இந்த விவகாரமானது, சென்னை உயர்நீதிமன்ற விசாரணை எல்லைக்கு உட்பட்டது அல்ல. எனவே, இங்கு வழக்கு தொடர இயலாது என தெரிவித்து, விஜய் சேதுபதிக்கு எதிரான தாக்குதல் புகாரை ரத்து செய்தும் உத்தரவிட்டது. இதனால், சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்திலேயே விஜய் சேதுபதிக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் சேதுபதி தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.