மரகதநாணயம் புகழ் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவண் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாகவும், ஆதிராராஜ் என்கிற புதுமுக நடிகை ஹீரோயினாகவும், வினய் வில்லனாகவும் நடித்துள்ள வீரன் திரைப்படம் ஜூன் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தின் வியாபாரத்தின் போது, எம் ஜி எனப்படும் மினிமம் கியாரண்டி முறையில் யாரும் வாங்க முன்வரவில்லை என்பதால் டிஸ்டிரிபியூசன் எனப்படும் விநியோக முறையில் வியாபாரம் செய்யப்பட்டது.
சென்னை உள்ளிட்ட 3 விநியோகப் பகுதிகளை வேறொரு குழுவும், மீதமுள்ள தமிழ்நாடு விநியோகத்தை சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனமும் பெற்றிருந்தன. இதற்காகத் தயாரிப்பு நிறுவனம் பெற்றிருந்த முன்தொகை சுமார் ரூ.8 கோடி என்று சொல்லப்படுகிறது. இதில் ஐந்தரை கோடி ரூபாயை சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனமும் இரண்டரை கோடி தொகையை வேறோரு குழுவும் கொடுத்திருக்கிறது. இப்படியாக வியாபாரம் முடிவடைந்த நிலையில் படம் வெளியானது.
ஆனால், படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. முதல்நாளிலிருந்தே எதிர்மறையான விமர்சனங்கள் மட்டுமின்றி மரகதநாணயம் படத்தை இயக்கியவர் எடுத்த படமா? என்கிற குற்றச்சாட்டுகளும் வந்தன. படத்தின் தரம் குறித்த விமர்சனங்கள் எதிர்மறையாக இருந்தாலும் வசூலில் சில படங்கள் முன்னணியில் இருக்கும். இந்தப்படத்தின் வசூலும் முதல்நாளிலிருந்தே நன்றாக இல்லை என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்து, திரைப்பட வியாபார வட்டத்தில் இருப்பவர்கள் கூறுகையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனதால் இந்தப்படத்துக்கு நல்ல வசூல் கிடைக்கும் என்று நம்பித்தான் படத்தைத் திரையிட்டோம், ஆனால் முதல்நாளே கூட்டம் வரவில்லை என்பதோடு படம் சரியில்லை என்கிற செய்தி பரவியதும் அடுத்தடுத்த நாட்களும் கூட்டம் ஏறவில்லை. இந்தப்படம் ஒட்டுமொத்த தமிழ்நாடு திரையரங்குகளிலிருந்து தயாரிப்பாளரின் பங்குத் தொகையாக சுமார் இரண்டு கோடி வந்தாலே அதிகம் என்கிற நிலை.
இதனால் இப்படத்துக்காக சுமார் ரூ.8 கோடியைக் கொடுத்திருக்கும் விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மீதிப் பணம் தயாரிப்பு நிறுவனத்தால் திருப்பிக் கொடுக்கப்பட்டுவிடும் என்றாலும் இலாபம் வரும் என்று நினைத்த படம் வட்டி, நஷ்டத்தைக் கொடுத்துவிட்டதே என்று வருந்திக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வியாபார வட்டத்தில் கூறப்படுகிறது.