தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளியான ‘பட்டத்து யானை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா. இப்படம் எதிர்ப்பார்த்த அளவில் வரவேற்புக் கிடைக்கவில்லை. தொடர்ந்து 2018ஆம் ஆண்டு சொல்லி விடவா என்றத் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படமும் தோல்வியடைந்தது.
நடித்த படங்கள் எதுவும் வெற்றிப் பெறாததால், திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய ஐஸ்வர்யா, தந்தை அர்ஜுனின் தொழிலைக் கவனித்து வருகிறார். இந்நிலையில், இவர் பிரபல காமெடி நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து வருகிறார். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்க இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
தம்பி ராமையாவின் மகன் உமாபதி தமிழில் அதாகப்பட்டது மஹா ஜனங்களே என்றத் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர்களின் திருமணம் குறித்து இதுவரை பேசாமல் இருந்த தம்பிராமையா, முதன்முறையாக பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். அதில், சம்மந்தியான அர்ஜுன் தற்போது லியோ திரைப்படத்தில் பிஸியாக இருக்கிருக்கிறார். அக்டோபர் 19ஆம் தேதி வரைக்கும் திருமண குறித்த பேச்சு இல்லை. அவரின் பட வேலைகள் முடிந்தவுடன் அறிவிப்போம் என்று சொல்லியிருக்கிறார்.
மருமகள் குறித்து கேட்டதற்கு, குழந்தைகள் நம்ம மூலமாக வந்தார்களே தவிர நமக்காக வரவில்லை. அவர்கள் விருப்பத்தை ஏற்று நாம் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும். தமிழில் மருமகள் மற்றும் மருமகன் என்கிற இரு நல்ல வார்த்தைகள் உண்டு. திருமணத்திற்கு பின் ஐஸ்வர்யா எங்க வீட்டிற்கு இன்னொரு மகள். அதே போல உமாபதி அர்ஜுன் சார் வீட்டுக்கு இன்னொரு மகன் என்று ஆசையாக பேசினார்.