வெள்ளித்திரை போல சின்னத்திரை பிரபலங்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தினமும் தொலைக்காட்சியில் சின்னத்திரை பிரபலங்களை ரசிகர்கள் பார்ப்பதால், அவர்கள் பற்றிய எந்த தகவல் வெளியானாலும் அது வைரலாகி விடுகிறது. அந்த வகையில், தற்போது சின்னத்திரை ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது பிரபலம் ஒருவரின் மரணம். 10-க்கும் மேற்பட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவரும், சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் பழம்பெரும் நடிகை விஜயலட்சுமி. 70 வயதாகும் இவர் இன்று காலை தூக்கத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே விஜயலட்சுமி சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், சமீபத்தில் பாத்ரூமில் இருந்து வழுக்கி விழுந்து தலையில் பலமாக அடிபட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சையில் இருந்த இவர், நேற்று தான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்ததாகவும், தொடர்ந்து சோர்வாகவே இருந்த அவர் இன்று அதிகாலை தூக்கத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தாலும், நிஜத்தில் எந்நேரமும் சிரித்த முகத்துடன், அனைவரிடமும் அன்பாக பழகும் குணம் கொண்டவர். இவரின் மரணம் ஒட்டு மொத்த சின்னத்திரை பிரபலங்களையும் உச்ச கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்களும் தொடர்ந்து இவரின் மறைவுக்கு தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.