சின்னத்திரை பிரபலம் பாவனியின் சமீபத்திய இன்ஸ்டகிராம் போஸ்ட், அமீருடனான காதலை உறுதிப்படுத்தும் விதமாக இருப்பதாகக் கூறி ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய சின்னத்தம்பி என்ற சீரியலில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர் நடிகை பாவனி ரெட்டி. இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டு, ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். பாவனி கலந்துக் கொண்ட பிக்பாஸ் 5 சீசனில் 3-வது இடத்தைப் பிடித்தார். காதல் திருமணம் செய்து, தனது கணவர் தற்கொலை செய்துக் கொண்ட கதையை உருக்கமாக பாவனி சொல்லும் போதே, பார்வையாளர்களின் மனதை வென்றார். பின்னர் வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்த அமீர், பாவனியிடம் நெருக்கம் காட்டினார்.
அவர்களின் நெருக்கத்தை பார்த்த போட்டியாளர்களும், ரசிகர்களும் அமீர் – பாவனி இருவரும் காதலிப்பதாக கூறி வந்தனர். தற்போது அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஒன்றாக இணைந்து நடனமாடி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் பிறந்தநாளைக் கொண்டாடிய அமீருக்கு, பாவனி வெளியிட்ட வாழ்த்து செய்தி, அவர்களின் காதலை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
பாவனி வெளியிட்டிருந்த வாழ்த்து செய்தியில், “பிறர் வாழ்வில் மகிழ்ச்சியை பரப்பவும், பிறருக்கு நன்மையை மட்டுமே விரும்பவும் தெரிந்த உன்னைப் போன்ற ஒருவரைப் பெற்றிருப்பது உண்மையிலேயே பாக்கியம். நான் உன்னிடமிருந்து பெறும் அன்பும் அக்கறையும் இந்த பூமியில் உனக்கு மகிழ்ச்சியைத் தரும் அனைத்தையும் நீ பெறுவாய் என நம்புகிறேன். என் நல்லது கெட்டது என அனைத்திலும் இருந்து என்னை நேசித்ததற்கு நன்றி, நான் பல விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன், ஆனால் வார்த்தைகள் வரவில்லை. லவ் யூ டா… பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்திருந்தார்.