சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி, போட்டியிட்டு தோல்வியை தழுவி நிலையில், அடுத்ததாக 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்றும் சில மாதங்களே உள்ள நிலையில், இப்போதே அனைத்து கட்சிகளும் யூகங்கள் வகுத்து தங்களுடைய கட்சிப் பணியை துவங்கியுள்ளனர். வேட்பாளர்கள் சேர்க்கை மற்றும் மாநாடு நடத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். ஓபிஎஸ் தரப்பில் சமீபத்தில் திருச்சியில் மிகப்பெரிய மாநாடு நடந்து முடிந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியும் தன்னுடைய பலத்தை நிரூபிக்கும் விதமாக மாநாடு நடத்த தயாராகி வருகிறார்.
பாஜகவுக்கு ஆதராக அதிமுக செயல்பட்டு வரும் நிலையில், பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டி வருகிறது. திமுகவுடன் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் போன்றவை இணைந்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த முறை தனித்துப் போட்டியிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, இந்த முறை பாஜகவை எதிர்க்கும் விதமாக திமுகவுடன் கூட்டணி வைக்குமா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஏற்கனவே கமல்ஹாசன், ராகுல் காந்தியை சந்தித்து தன்னுடைய ஆதரவை தெரிவித்த நிலையில், திமுக கட்சியுடனும் கொஞ்சம் நெருக்கம் காட்டி வருகிறார். எனவே, விரைவில் இது குறித்து கமல்ஹாசன் அறிவிப்பார் என கூறப்படுகிறது. அதே நேரம் தன்னுடைய கட்சிக்கு வேட்பாளர்கள் சேர்க்கையிலும் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமான வினோதினி வைத்தியநாதன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார்.
இது குறித்த புகைப்படமும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதை போல் கமல்ஹாசனின் 233-வது படத்தை இயக்கும் இயக்குனர் ஹெச்.வினோத், விவசாயிகளை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசும்போது கலந்து கொண்டதால், எச் வினோத்தும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துவிட்டாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.