நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குநர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘கோப்ரா’.
ஒரிசா, ஸ்காட்லாந்து நகரங்களில் உயர் பதவிகளில் இருக்கும் அரசியல் தலைவர்களை தனது கணித மூளையால் ஸ்கெட்ச் போட்டு கொலை செய்கிறார் விக்ரம். அவரை கண்டுபிடிக்க துப்புதுலக்கும் இன்டர்போல் அதிகாரியாக இர்பான் பதான் களமிறக்கப்படுகிறார். இந்த இரண்டு கொலைகளும் நடந்து கொண்டிருக்கும் போதே, ரஷ்ய அமைச்சரை கொலை செய்யும் படலத்தில் இறங்குகிறார் விக்ரம். இது ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க, மற்றொரு பக்கம் விக்ரமை கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி காதலித்து வருகிறார். இறுதியில் இந்தக்காதல் என்ன ஆனது? விக்ரம் அரங்கேற்றிய கொலைகளுக்கான காரணம் என்ன? போன்றவற்றிற்கான விடைகளே கோப்ரா படத்தின் கதை.
‘மகான்’ படத்தில் ரசிகர்களை ஏமாற்றிய விக்ரம், ‘கோப்ரா’ படம் மூலம் மீண்டும் ஒருமுறை ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார். ஜீனியஸ் கணித வாத்தியார் கதாபாத்திரத்தில் ரசிக்க வைத்த விக்ரம், மற்றொரு கதாபாத்திரத்தில் ஏமாற்றமான நடிப்பையே கொடுத்துள்ளார். அறிமுகமான முதல் படத்திலேயே இர்பான் பதான் கதாபாத்திரத்தை நன்கு புரிந்து நடித்திருக்கிறார். நடிகை ஸ்ரீநிதி, கதாபாத்திரத்தின் ஆழமான காதல் தன்மையை புரிந்து கொண்டு நடித்திருப்பது சிறப்பு. வில்லனாக வரக்கூடிய ரோஷன் மேத்யூ வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். இவர்களைத்தவிர வேறு எந்தக் கதாபாத்திரமும் மனதில் பெரிதாக நிற்கவில்லை.
டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் என கவனம் ஈர்த்த திரைப்படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்துவிடம் இருந்து நிச்சயம் இந்த மாதிரியான கதையை யாருமே எதிர்பார்க்கவில்லை. படத்தின் ஆகப்பெரும் பலவீனமாக அவரது கதையும், திரைக்கதையும் அமைந்ததுதான் பெரும் சோகம். ஆரம்பத்தில் பிரம்மாண்டத்திலும், விறுவிறுப்பிலும் மிரட்டிய திரைக்கதை படிப்படியாக ஆடியன்ஸூக்கு ஒரு விதமான சோர்வை கொடுத்துவிடுகிறது. அந்த சோர்வு படத்தில் அடுத்தடுத்து சில டீடெய்லான காட்சிகள் வந்தாலும் கூட, அதை ரசிப்பதற்கான ஆர்வத்தை குறைத்து விடுகிறது. முதல்பாதியே ஆடியன்ஸூக்கு ஒரு முழு படம் பார்த்த ஃபீலை கொடுத்துள்ளது. அந்த அளவுக்கு படம் நீளம்.
சரி, இரண்டாம் பாதியில் இருந்தாவது படம் நன்றாக இருக்கும் எதிர்பார்த்தால், ஃப்ளேஷ் பேக் என்ற பெயரில், திரைக்கதையை அங்கும், இங்கும் இழுத்து தயவு செய்து முடியுங்கள் என்று சொல்ல வைத்து விட்டார்கள். Hallucinations என்ற பெயரில் விக்ரமை வைத்து விளையாண்டிருப்பது ஏற்கனவே இருந்த எரிச்சலை மேலும் அதிகப்படுத்தி விட்டது. படத்தை கொஞ்சம் ரசிக்க வைப்பது படத்தில் இடம் பெறும் லொக்கேஷன்களும், புவன் ஸ்ரீவாசனின் ஒளிப்பதிவுதான். பாடல்கள் ரசிக்க வைத்தாலும், பின்னணி இசையில் வழக்கம் போல ஆடியன்ஸை முட்டாள் ஆக்கியிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். மொத்தத்தில் “கோப்ரா” விநாயகர் சதுர்த்திக்கு தேவையில்லாத ஆணி.