நடிகை சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலம் திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா நடித்து வெளியான திரைப்படம் சாகுந்தலம். ரூ.70 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை ருத்ரமாதேவி பட புகழ் குணசேகரன் இயக்கியிருந்தார். மகாகவி காளிதாசர் எழுதிய புராணக் கதையான சாகுந்தலம் என்ற கதையை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில், சாகுந்தலையாக நடிகை சமந்தாவும், துஷ்யந்த் கதாபாத்திரத்தில் தேவ் மோகனும் நடித்திருந்தனர்.
இந்நிலையில், சாகுந்தலம் திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் வெறும் ரூ.10 கோடி மட்டுமே வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டில் ரூ.35 கோடி வருமானம் பெற்றது. தொலைக்காட்சி சேனல்கள் மூலம் சில கோடி வருவாயை பெற்றிருந்தது. இதன் அடிப்படையில் படக் குழுவிற்கு ரூ.20 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. நடிகை சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘யசோதா’ திரைப்படம் ஓரளவு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதித்த நிலையில், ‘சாகுந்தலம்’ திரைப்படம், எதிர்மறை விமர்சனங்களால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்று கூறப்படுகிறது. உடல்நிலை சரியில்லாதபோதும் சாகுந்தலம் புரோமோஷன் நிகழ்வுகளில் கலந்துகொண்ட சமந்தா இப்படத்தின் தோல்வியால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.