இயக்குநர் பா.ரஞ்சித், லோகேஷ் கனகராஜ், எச்.வினோத் உள்ளிட்ட முக்கிய இயக்குநர்களாக இருக்கும் பலர் நடிகர் கார்த்தியுடன் படம் செய்த பிறகே பிரபலமானார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த அளவுக்கு நடிகர் கார்த்தியின் கதைத் தேர்வு திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. கடந்த வருடம் மட்டும் விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் என ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தார். இந்த வருடம் கார்த்தியின் நடிப்பில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், நடிகர் கார்த்தி ரசிகர் மன்றத்தின் தென் கிழக்கு மாவட்ட நிர்வாகியாக பதவி வகித்த 29 வயதாகும் வினோத் என்ற ரசிகர் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து சென்னை திருவான்மியூரில் உள்ள அவருடைய இல்லத்திற்கு நடிகர் கார்த்தி நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் வினோத்தின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது சகோதரர் நடிகர் சூர்யா தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகியின் மறைவுக்கு நாமக்கலில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களை மதிக்கும் அண்ணன் – தம்பி இருவரது செயல்களும் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.