பிரபல போஜ்புரி பாடகி நிஷா உபாத்யாயுக்கு பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயம் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை ஜந்தா பஜார் காவல் நிலையப் பகுதியில் உள்ள செந்துர்வா கிராமத்தில் நடந்தது. நிகழ்ச்சியின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, இது வெளிச்சத்திற்கு வந்ததாக போலீஸார் வியாழக்கிழமை தெரிவித்தனர். உபாத்யாயின் இடது தொடையில் அடிபட்டு, பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
“இந்த சம்பவம் தொடர்பாக எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை. எனக்கும் சமூக வலைதளங்கள் மூலம் தான் தெரிய வந்தது. மேலும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன” என்று ஜந்தா பஜாரின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) நஸ்ருதீன் கான் கூறினார். தற்போது பாடகியின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பீகார் கலை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஜிதேந்திர குமார் ராய் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்துவது கிரிமினல் குற்றம் என்றும், அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.