பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கரின் மகன் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கப்பட்டவர் பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர். 1965ஆம் ஆண்டு ’இரவும் பகலும்’ என்ற திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவர், ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு நிகரான சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் நடித்த அதே கால கட்டத்தில் நடித்தாலும், இவருக்கென ரசிகர்கள் இருந்தார்கள். இவரது சமகால நடிகர்களான முத்துராமன், ரவிச்சந்திரன் போன்றோருடனும் இவர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிறகு, ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளையில் வில்லனாகப் புதிய பரிமாணத்தில் தோன்றி பாராட்டுகளைப் பெற்றார். அதன்பிறகு, பல படங்களிலும் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பரிமளித்தார். சினிமாவை தாண்டி இவர் பல சமூக நலதிட்ட உதவிகளை செய்துள்ளார். இவர், 2000ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானார். இவருக்கு சஞ்சய், விஜய் என இரண்டு மகன்கள் உள்ளனர். விஜய் ஷங்கர் என்பவர் கண் மருத்துவராக உள்ளார். அவர் தன்னால் முயன்ற மருத்துவ உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். தற்போது சஞ்சய் சீரியல்களில் நடிக்க தொடங்கியுள்ளார். விஜய் ட்வியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் தான் நடித்து வருகிறார்.