தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் சிரஞ்சீவி 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.. தெலுங்கு மட்டுமின்றி, தமிழ், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் அவர் பல படங்களில் நடித்துள்ளார்.. தனது 40 ஆண்டு கால வாழ்க்கையில் தொடர்ச்சியான சூப்பர்ஹிட படங்களை கொடுத்துள்ளார்.. திரைத்துறையில் உச்சத்தில் இருந்தபோதும், சிரஞ்சீவி மிகவும் எளிமையானவராகவும் அடக்கமாகவும் அறியப்பட்டார், அவரது ரசிகர்கள் பலர் அவரை ஒரு கடவுளாகக் கருதுவதற்கு இதுவே காரணம்.
சிரஞ்சீவி இன்று தனது 67வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் மெகாஸ்டாரைப் பற்றி அதிகம் அறியப்படாத சில தகவல்களை பார்க்கலாம்.. 1987 இல், சிரஞ்சீவி ஆஸ்கார் விருதுக்கு அழைக்கப்பட்ட முதல் தென்னிந்திய மொழி நடிகர் ஆனார். 2006 ஆம் ஆண்டில், இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. வெற்றிகரமான திரை வாழ்க்கைக்குப் பிறகு, சிரஞ்சீவி அரசியலில் நுழைந்தார்.. அவர் 2012 இல் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிரஞ்சீவி 2012 முதல் 2014 வரை மத்திய அரசின் சுற்றுலாத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். இருப்பினும், அவர் பின்னர் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.
சினிமாவில் சிரஞ்சீவியின் பணிக்காக ஆந்திரா பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தையும் வழங்கியது. புகழ்பெற்ற நிகழ்ச்சியான கோடீஸ்வர நிகழ்ச்சியின் தெலுங்கு தழுவலான எவரு மீலோ கோடீஸ்வருலு என்ற நிகழ்ச்சியின் நான்காவது சீசனுக்கு சூப்பர் ஸ்டார் தொகுப்பாளராக இருந்தார். இந்த நிகழ்ச்சி ஸ்டார் மா டிவியில் ஒளிபரப்பப்பட்டது. நாகார்ஜுனா மற்றும் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து சிரஞ்சீவி, இந்தியன் சூப்பர் லீக் கிளப் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சியின் இணை உரிமையாளராக உள்ளார்.